ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு போலீசார் குவிப்பு


ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு  போலீசார் குவிப்பு
x

மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு போலீசார் குவிப்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் வசித்து வந்தார்.அங்கு புதிதாக பெரிய அளவில் வீடு கட்டி வருகிறார். இதனால், அவர் தற்காலிகமாக சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். தினமும் இரவு பெரம்பூரில் தான் கட்டும் புதிய வீடு அருகே நண்பர்கள், கட்சிக்காரர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்.

அதுபோல, நேற்று இரவு 7 மணியளவில் அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் அங்கு வந்தார்கள். அவர்கள் கையில் பட்டா கத்திகள் இருந்தன. மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கினார்கள்.

சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் அலறியபடி கீழே சாய்ந்தார். அவருடன் இருந்த அவரது நண்பர்கள் வீரமணி, பாலாஜி ஆகியோர் கொலையாளிகளை பிடிக்க பார்த்தனர். ஆனால், அதற்குள் கொலையாளிகள் 6 பேரும் தப்பி சென்றுவிட்டனர். இதில், பாலாஜி என்பவருக்கும் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆம்ஸ்ட்ராங்கை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலை நடந்த இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களும், ஏராளமான பொதுமக்களும் திரண்டனர். சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.

இதனிடையே இரவோடு இரவாக 8 பேர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். விசாரணைக்கு பிறகுதான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று காவல்துறை அதிகாரி அஸ்ரா கார்க் கூறினார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஆம்ஸ்ட்ராங் உடல் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது. இதனிடையே, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள். இதனால், பாதுகாப்பு நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story