காவல், தீயணைப்புத்துறையினர் உஷார் நிலையில் இருக்க வேண்டும்


காவல், தீயணைப்புத்துறையினர் உஷார் நிலையில் இருக்க வேண்டும்
x

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுக்க காவள் மற்றும் தீயணைப்புத்துறையினர் உஷார் நிலையில் இருக்க அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர்

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுக்க காவள் மற்றும் தீயணைப்புத்துறையினர் உஷார் நிலையில் இருக்க அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வுகூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். கலெக்டர் அமர்குஷ்வாஹா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகளும், அதன் தொலைபேசி எண் மற்றும் அதிகாரிகள் விபரம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தாலுகா வாரியாக அலுவலர்கள் நியமிக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை குழு தயார் நிலையிலும், வெள்ளம் ஏற்படும் பட்சத்தில், பொது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல வாகனம் மற்றும் தங்குமிடம் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள்

உணவு மற்றும் குடிநீர் இருப்பு போதிய அளவில் கையிருப்பு இருக்க வேண்டும். பொது வினியோத் திட்டம் எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

வெள்ளம் சூழும் இடங்களில் மின்சாரத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கவும், வடிகால் பணிகளை மேற்கொள்ளும் பகுதிகளில் போதுமான தடுப்புகள் வைத்து அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். சாலைகளில் மரம், விழுந்தால் அதை அகற்றுவதற்கு பொக்லைன் எந்திரம் மற்றும் மரம் அறுக்கும் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும்.

உஷார் நிலையில்

கடந்த ஆண்டு மழை வெள்ளத்தின் போது திருப்பத்தூர், ஆம்பூர் ஆகிய நகரப்பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை உஷார் நிலையில் இருக்க வேண்டும். மீட்பு பணிகளை மேற்கொள்ள பணியாளர்களை நியமிக்க வேண்டும். நீர் நிலைகளில் குழந்தைகள் விளையாடவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்கக் கூடாது. அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.பாலகிருஷ்ணன், சி.என்.அண்ணாதுரை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, திட்ட இயக்குனர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட பால்வளத்தலைவர் எஸ்.ராஜேந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story