விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டி - அண்ணாமலை அறிவிப்பு


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டி - அண்ணாமலை அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2024 11:45 PM GMT (Updated: 14 Jun 2024 11:46 PM GMT)

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடுவதாக அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ந்தேதி நடக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க. விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றிபெற அனைவரும் இணைந்து பாடுபடுவோம், வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மத்திய மந்திரியாக எல்.முருகன் பதவியேற்ற பின்னர், நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் பா.ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து தமிழக பா.ஜனதா தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்திலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொக்லைன் எந்திரம் மூலம் மலர்களும் தூவப்பட்டது.

அவருக்கு தமிழக பா.ஜனதா சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மத்திய மந்திரி எல்.முருகன், அண்ணாமலை ஆகிய 2 பேருக்கும் சேர்த்து ஆளுயர மாலைகளும் அணிவிக்கப்பட்டது.

பின்னர், மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை இருந்தது. 'நீட்' தேர்வு வந்த பின்னர், அகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் இருந்து அதிகமான மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து வருகிறார்கள். பிரதமரின் 100 நாள் செயல்திட்டம் தொடர்பாக ஒவ்வொருத்துறையிலும் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் உரிமைகள் நிலை நாட்டப்படும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ரூ.11 லட்சம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்து பா.ஜனதா எம்.பி.க்கள் இல்லை. எனினும் தமிழ்நாட்டு மக்கள் மீது அலாதிபிரியம் வைத்திருக்கின்ற காரணத்தால் இவ்வளவு நிதியை கொடுத்து இருக்கிறார். இந்த வளர்ச்சி தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணாமலை கூறியதாவது:-

அந்தப்பக்கம் (தி.மு.க. கூட்டணி) 39 எம்.பி.க்கள் இருந்தாலும் தமிழ்நாட்டின் ஆக்கப்பூர்வமான பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வை கொடுக்கக்கூடிய தமிழ்நாட்டின் குரலாக எல்.முருகன் இருக்க போகிறார். அவர் இணைப்பு பாலமாக இருந்து வருகிறார்.

கோவையில் தி.மு.க. முப்பெரும் விழா நடத்துவதாக அறிவித்தது தவறான சகுனம். எனவேதான் ஜூன் 14-ந்தேதியில் இருந்து 15-ந்தேதிக்கு மாறி இருக்கிறது.

கோவை மாவட்டத்தின் வளர்ச்சியை நசுக்கியதே தி.மு.க.தான். இந்த வெற்றி தி.மு.க.வுக்கு நிரந்தரம் கிடையாது. 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி கோவை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எனவே தி.மு.க. முப்பெரும் விழாவை தற்காலிக கொண்டாடமாகத்தான் நான் பார்க்கிறேன்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஈரோட்டில் நடந்த இடைத்தேர்தல் போன்று இருந்து விடக்கூடாது என்பது தேர்தல் ஆணையத்துக்கு எங்களுடைய வேண்டுகோள். ஈரோடு இடைத்தேர்தல் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளியது. மக்களை விலைக்கு வாங்கி ஆட்டுப்பட்டியை போன்று அந்த தேர்தல் நடைபெற்றது.

தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் பா.ம.க. போட்டியிடுகிறது. இது கூட்டணியில் உள்ள எல்லா தலைவர்களும் பேசி முடிவு செய்து, அமித்ஷா, ஜே.பி. நட்டா ஆகியோருடன் தொலைபேசியில் பேசி ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு ஆகும். இந்த இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story