புதுவண்ணாரப்பேட்டையில் பிளஸ்-2 மாணவி தற்கொலை


புதுவண்ணாரப்பேட்டையில் பிளஸ்-2 மாணவி தற்கொலை
x

புதுவண்ணாரப்பேட்டையில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் உருக்கமாக எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

சென்னை

பிளஸ்-2 மாணவி தற்கொலை

சென்னை புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி முதல் தெருவைச் சேர்ந்தவர் மேனகா (வயது 40). இவர், சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கணவனை இழந்த இவர், வாடகை வீட்டில் மகள், மகன் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார். இவருடைய மகள் கீர்த்தனா (17), தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவி கீர்த்தனா, வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிவிட்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உருக்கமான கடிதம்

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், வீட்டில் சோதனை செய்தனர். அப்போது மாணவியின் புத்தக பையில் ஒரு துண்டு சீட்டில் மாணவி எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் அவர், "நான் இந்த முடிவு எடுக்க காரணம் என்னோட பொருளாதார பிரிவு மேடம். அவங்க இன்னைக்கு என்னை எல்லார் முன்னிலையிலும் ரொம்ப...." என்று மட்டும் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அதற்கு மறுப்பு தெரிவித்த உறவினர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுத்தால்தான் கீர்த்தனா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க சம்மதிப்போம். இல்லாவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என்றனர்.

சம்பவ இடத்துக்கு வந்த திருவொற்றியூர் போலீஸ் உதவி கமிஷனர் முகமது நாசர், மாணவியின் தாய் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கீர்த்தனா உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story