134 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது: திருவள்ளூர் அரசு பள்ளியில் கலெக்டர் நேரில் ஆய்வு


134 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது: திருவள்ளூர் அரசு பள்ளியில் கலெக்டர் நேரில் ஆய்வு
x

திருவள்ளூர் மாவட்டத்தில் 134 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் அரசு பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர்


திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் திருவள்ளூர் பகுதியில் உள்ள ஆர்.எம் ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை மொத்தம் 134 மையங்களில் நடைபெறுகிறது. இதில் இரண்டு கல்வி மாவட்ட மையங்களாக பிரிக்கும்போது பொன்னேரி கல்வி மாவட்ட மையம் சார்பாக 93 பள்ளிகளிலும், திருவள்ளூர் கல்வி மாவட்ட மையம் சார்பாக 41 பள்ளிகளிலும் இந்த பொதுத்தேர்வுகள் நடைபெறுகிறது. இரண்டும் சேர்த்து 67 அரசு பள்ளிகளிலும், 2 ஆதிதிராவிடர் துறையை சேர்ந்த பள்ளிகளிலும், அரசு நிதி உதவி பெறும் 16 பள்ளிகளிலும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளாக 49 பள்ளிகளிலும், மொத்தம் 134 பள்ளிகளில் இந்த பொதுத்தேர்வுகள் நடைபெறுகிறது.

இதில் 12-ம் வகுப்பு மாணவர்களை பொறுத்தவரை 42 ஆயிரத்து 858 மாணவர்கள் இந்த பொதுத்தேர்வுகள் எழுதவுள்ளனர். இதில் 20 ஆயிரத்து 790 மாணவர்களும், 22 ஆயிரத்து 68 மாணவியர்களும் இந்த தேர்வு எழுத உள்ளனர். திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு கல்வி மாவட்டங்களுக்கும் அந்தந்த இடங்களில் வினாத்தாள்கள் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டு அங்கிருந்து தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

2 ஆயிரத்து 750 பேர் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பறக்கும் படை என்ற முறையில் அந்தந்த பள்ளிகளுக்கு உடனடியாக சென்று ஆய்வு செய்வதற்காக 285 நபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அது மட்டுமன்றி ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டுப்பாட்டு அறையை பராமரிப்பதற்காக மட்டுமின்றி அந்தப் பள்ளியில் உள்ள 67 முக்கிய தேர்வு கண்காணிப்பாளர்களும், 167 துறை அலுவலர்களையும் நியமித்துள்ளோம். இந்த தேர்வில் அந்தப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் யாரையும் அந்த பள்ளியில் இல்லாமல் வேறு பள்ளிக்கு பணிக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பொதுத்தேர்வுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மட்டுமின்றி ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும் இந்த தேர்வு மையங்களில் இல்லாமல் வேறு பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story