கோடை மழையை பயன்படுத்தி உழவு பணி தீவிரம்
சாயல்குடி அருகே கோடை மழையை பயன்படுத்தி உழவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சாயல்குடி,
சாயல்குடி அருகே கோடை மழையை பயன்படுத்தி உழவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பொய்த்த பருவமழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து விவசாயிகள் நெல் விவசாய பணிகளில் ஈடுபடுகின்றனர். ஆண்டுதோறும் ஆடி, ஆவணி மாதங்களிலேயே நெல் விவசாயத்திற்காக விவசாய நிலங்களை ஏர் உழுது நெல் விதைகளை தூவி விடுவர். தொடர்ந்து ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பெய்யும் மழையை பொறுத்து விவசாய நிலங்களில் தூவப்பட்ட நெல் விதைகள் நெற்பயிர்களாக நன்கு வளர தொடங்கிவிடும். தொடர்ந்து தை, மாசி மாதங்களில் வளர்ந்து நிற்கும் இந்த நெற்பயிர்களை அறுவடை செய்து விவசாயத்தில் ஈடுபடுவது வழக்கம்.
கடந்த ஆண்டு மாவட்டத்தில் பருவமழை சீசனில் பெரும்பாலான ஊர்களில் மழையே பெய்யாததால் நெல் விவசாயம் முழுமையாகவே பாதிக்கப்பட்டது. அதிலும் சாயல்குடி மற்றும் கடலாடி பகுதியை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் நெற் பயிர் விவசாயம் முழுமையாகவே பாதிக்கப்பட்டு விட்டது.
கோடை உழவு
இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த 1 வாரத்திற்கு மேலாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக சாயல்குடி, கடலாடி, சிக்கல் உள்ளிட்ட பல ஊர்களிலும் கோடை மழை தொடர்ந்து பெய்தது. இந்த மழையால் சாயல்குடி அருகே ஓடைக்குளம், மேல கிடாரம், சேரந்தை, திருவரங்கை உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாய நிலங்களில் அதிக அளவில் மழைநீர் தேங்கி நிற்கின்றன. விவசாய நிலங்களில் மழை நீர் நிற்பதாலும் கோடை மழை பெய்து வருவதாலும் இதை பயன்படுத்தி கோடை உழவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சேரந்தை கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி கூறும்போது, நிலத்தை பண்படுத்துவதற்காகவே கோடை மழையை பயன்படுத்தி ஏர் உழும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். இது போன்று செய்யும் பட்சத்தில் மழை சீசனில் நெற் பயிர்கள் வளர்ந்து வரும் போது அதிக களைகள் இல்லாமல் நெற்பயிர்கள் நன்றாக வளரும். அதற்காகவே கோடை மழையில் விவசாய நிலங்களை ஏர் உழுது விவசாய நிலத்தை பண்படுத்துகின்றோம் என்றார்.