நாமக்கல்லில்போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உமா தலைமை தாங்கி விழிப்புணர்வு உறுதிமொழியான போதை பொருட்களை நான் உபயோகிக்க மாட்டேன். எந்தவொரு நோக்கத்திற்காகவும், எந்த வகையிலும் தீங்கு விளைவிக்கும் அல்லது சட்டவிரோதமான மருந்துகளை உட்கொள்ள மாட்டேன். இளந்தலைமுறையினரிடம் குடி மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துச்சொல்லி, அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என வாசிக்க, அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் எதிர்ப்பு தின ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன், மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) கமலக்கண்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.