'பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப்பொருட்களை உபயோகியுங்கள்' பொதுமக்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப்பொருட்களை உபயோகியுங்கள் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் மூலம் பொதுமக்களுக்கு தூய்மையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நகரமன்ற தலைவர் சுப்ராயலு தலைமை தாங்கினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, நகரமன்ற துணை தலைவர் ஷமீம்பானு அப்துல்ரசாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் குமரன் வரவேற்றார்.
மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
பிளாஸ்டிக் கழிவால் தீங்கு
பிளாஸ்டிக் கழிவுகளால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் தீங்கு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தாங்கள் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப்பொருட்களை உபயோகிக்க வேண்டும்.
நகராட்சியின் சார்பாக பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களிடம் பொதுமக்கள் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும்.
இதற்கென நகராட்சி, உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு குப்பைகளை எவ்வாறு தரம் பிரிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் பள்ளிப்பருவத்திலேயே மாணவ, மாணவியர்கள் குப்பைகளால் ஏற்படக்கூடிய தீங்குகள் குறித்து அறிந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பாராட்டு சான்றிதழ்கள்
முன்னதாக என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தூய்மையை போற்றுவோம், என் குப்பை என் பொறுப்பு, பிளாஸ்டிக்கை ஒழித்து, மீண்டும் மஞ்சப்பையை கையில் எடுப்போம் என்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டி, நடனம் மற்றும் இசைக்கச்சேரி மூலமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவியர்களுக்கும், மாடித்தோட்டம் அமைத்தவர்களுக்கும் பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள், இன்னர் வீல் கிளப் உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.