அத்திக்கடவு -அவினாசி திட்டத்தை நவம்பர் 10-ந் தேதிக்குள் முடிக்க திட்டம்; அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி


அத்திக்கடவு -அவினாசி திட்டத்தை நவம்பர் 10-ந் தேதிக்குள் முடிக்க திட்டம்;  அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
x

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நவம்பர் 10-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நவம்பர் 10-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

80 கோரிக்கைகள்

தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலும், துறை அமைச்சர்களை சந்தித்தும் தொகுதி சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்கள். இருப்பினும் எம்.எல்.ஏ.க்கள், தங்கள் தொகுதியின் பிரதான 10 கோரிக்கைகளை வழங்கினால் முன்னுரிமைப்படி செய்து முடிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பெறப்பட்ட கோரிக்கைகள் அந்தந்த துறைக்கு அனுப்பப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டன. அவற்றை முதல்-அமைச்சர் விரைவில் ஆய்வு செய்ய உள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதி எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து 80 கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதில் சில கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிறைவேற்றப்படும். சில கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன.

அத்திக்கடவு-அவினாசி திட்டம்

அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு 8 நீரேற்று நிலையங்களின் பணிகள் முடிந்துவிட்டன. பிற பணிகளும் 99 சதவீதம் முடிந்துவிட்டன. குழாய்கள் பதிக்கும் இடங்கள் தொடர்பாக சில பகுதிகளில் விவசாயிகளுடன் சில பிரச்சினைகள் இருந்தன. அதில் தீர்வு காணப்பட்டு இருக்கிறது. எனவே வருகிற நவம்பர் மாதம் 10-ந் தேதிக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் காலிங்கராயன்பாளையம் பகுதியில் பிரமாண்ட குழியில் தண்ணீர் தேங்கிவிட்டது. எனவே பல நாட்களாக வேலை செய்ய முடியவில்லை. தண்ணீர் வெளியேற்றியதும் பணிகள் தொடங்கும்.

8 சுத்திகரிப்பு நிலையங்கள்

சாயக்கழிவுகளை கடலில் கலக்கும் திட்டம் சாத்தியமில்லை என்பதுபோல தெரிவிக்கின்றனர். எனவே அதற்கு மாற்றாக, ஈரோடு மற்றும் பவானியில் 8 இடங்களில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. அந்த திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

சத்தியமங்கலத்தில் சென்ட் பேக்டரி (நறுமண தொழிற்சாலை) அமைக்க, கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.. அங்கு, 6 மாதங்கள் அதிக அளவில் பூக்கள் பூத்து அறுவடை செய்யப்பட்டாலும், குளிர் காலமான, 6 மாதங்கள் பூக்கள் குறைவாக பூக்கும். அப்போது விலை அதிகமாக கிடைக்கும் என்பதால், வெளியே விற்பனை செய்யவே விவசாயிகள் விரும்புவார்கள். எனவே, தனியார் ஆலை அமைக்க வாய்ப்பு குறைவு. விவசாயிகள் குழு கூட்டமைப்பு ஏற்படுத்தி, தொழிற்சாலை அமைக்க முடியுமா என்பதும் பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.


Next Story