பறவை காவடி, பால்குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
கூடலூர் 2-ம் மைலில் முத்து மாரியம்மன் கோவில் விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள், பறவை காவடிகள் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கூடலூர்
கூடலூர் 2-ம் மைலில் முத்து மாரியம்மன் கோவில் விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள், பறவை காவடிகள் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முத்துமாரியம்மன் கோவில் விழா
கூடலூர் 2-ம் மைல் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமமும், சிவன், சக்தி, முருகன், நவகிரக வழிபாடுகள் நடைபெற்றது. காலை 9 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து காப்பு கட்டி அம்மனுக்கு விசேஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு வேடன் வயல் ஆற்றில் இருந்து அம்மனை கோவிலுக்கு கொடியழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று (25-ந் தேதி) காலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு வேடன் வயலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள், பறவை காவடிகள் எடுத்து முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.
பால் குடங்கள், காவடிகள் எடுத்து ஊர்வலம்
தொடர்ந்து அம்மன் உள்பட பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு வான வேடிக்கை மற்றும் மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவிலில் இருந்து புறப்பட்ட திருத்தேர் மீனாட்சி, நிமினிவயல், 1-வது மைல் முருகன் கோவில், ஆனைசெத்தகொல்லி ராமர் கோவில், வேடன் வயல் அய்யப்பன் கோவில் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று அதிகாலை 3 மணிக்கு கோவிலை வந்தடைந்தது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கரக ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.