பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: கவர்னர் மாளிகையில் என்.ஐ .ஏ அதிகாரிகள் ஆய்வு...!


பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: கவர்னர் மாளிகையில் என்.ஐ .ஏ அதிகாரிகள் ஆய்வு...!
x
தினத்தந்தி 9 Dec 2023 7:15 AM IST (Updated: 9 Dec 2023 10:18 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்துள்ளது.

சென்னை,

கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை மீது ஒருவர் பெட்ரோல் குண்டுகளை வீச முயன்றார். கவர்னர் மாளிகையின் வெளியே பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார், அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். அதற்குள் அவர் வீசிய பெட்ரோல் குண்டுகள் மாளிகைக்கு வெளியே விழுந்தன. மேலும், அவரிடம் இருந்த 2 பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர், அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார், கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

மேலும் ரவுடி கருக்கா வினோத் மீது என்.ஐ.ஏ நவம்பர் 14- ம் தேதியன்று வழக்குப்பதிவு செய்தது. இதில் கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக சம்பந்த பட்ட ஆவணங்களை சென்னை காவல்துறை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் சில தினங்களுக்கு முன்பு ஒப்படைத்தது. இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். இதில் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தடயவியல் அதிகாரிகள் துணையோடு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சுமார் ஒன்றரை மணிநேரம் ஆய்வு செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்பவம் நடந்த நேரத்தில் பாதுகாப்பில் இருந்த ஆயுதப்படை காவலரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.


Next Story