டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு - மதுபானம் கொடுக்க மறுத்ததால் வாலிபர் ஆத்திரம்


டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு - மதுபானம் கொடுக்க மறுத்ததால் வாலிபர் ஆத்திரம்
x

மதுபானம் கொடுக்க மறுத்ததால் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை சின்னபோரூர், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கதிரவன் (வயது 32). இவர், போரூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் குடிபோதையில் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார். ஆனால் ஊழியர்கள், விற்பனை முடிந்து கடையை பூட்டிவிட்டு உள்ளே அமர்ந்து விற்பனையான மதுபாட்டில்கள் குறித்து கணக்கு பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது கதிரவன், அங்கிருந்த ஊழியரிடம் மதுபானம் தரும்படி கேட்டார். விற்பனை முடிந்து கடையை பூட்டி விட்டதால் மதுபானம் கொடுக்க முடியாது என்று கடை ஊழியர் ராஜேந்திரன் (43) கூறினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கதிரவன், பக்கத்து தெருவுக்கு சென்று தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். அதிலிருந்த பெட்ரோலை காலி மதுபாட்டிலில் நிரப்பினார். மீண்டும் டாஸ்மாக் கடைக்கு வந்த கதிரவன், பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை பற்ற வைத்து டாஸ்மாக் கடை மீது வீசினார்.

அந்த பெட்ரோல் குண்டு, பூட்டி இருந்த டாஸ்மாக் கடையின் ஷட்டரில் விழுந்து வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள், உடனடியாக ஷட்டரில் எரிந்த தீயை அணைத்தனர்.

பின்னர் பெட்ரோல் குண்டு வீசிய கதிரவனை மடக்கிப்பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அவரை வளசரவாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் கதிரவனை கைது செய்தனர். அவரது இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான கதிரவனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story