ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. ஆதாரத்துடன் விளக்கம் அளித்த காவல்துறை


ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. ஆதாரத்துடன் விளக்கம் அளித்த காவல்துறை
x
தினத்தந்தி 27 Oct 2023 2:06 PM IST (Updated: 28 Oct 2023 1:56 PM IST)
t-max-icont-min-icon

கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத் நடந்து செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோ மற்றும் அவரை போலீசார் பிடிக்கும் காட்சிகளை வெளியிட்டு டிஜிபி விளக்கம் அளித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவு வாயில் அருகே ரவுடி ஒருவர் கடந்த 25ம் தேதி பெட்ரோல் குண்டுகளை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை மீது ஆளுநர் மாளிகை அதிருப்தி தெரிவித்தது. இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத் நடந்து செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோ மற்றும் அவரை போலீசார் பிடிக்கும் புகைப்பட காட்சிகளை வெளியிட்டு விளக்கம் அளித்தார்.

குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் பேசும்போது, " ரவுடி கருக்கா வினோத் ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயற்சிக்கவில்லை. ஆளுநர் மாளிகை கூறுவதுபோல் ராஜ்பவன் ஊழியர்களால் ரவுடி கருக்கா வினோத் பிடிக்கப்படவில்லை. பாதுகாப்பில் உள்ள போலீசாரே மடக்கிப் பிடித்தனர். ஆளுநர் மாளிகை வெளியிட்ட புகார் முற்றிலும் உண்மைக்கு மாறானது. தடை செய்யப்பட்ட அமைப்புடன் ரவுடி கருக்கா வினோத்துக்கு தொடர்பு இருப்பதாக கூறுவது தவறு" என்றார்.

இதேபோல் மயிலாடுதுறையில் ஆளுநர் தாக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாகவும் சிசிடிவி காட்சிகளுடன் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story