ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக இணைந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு
மாணவர் தற்கொலையில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய கோரி ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக இணைந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும் மாணவர்களை நெறிப்படுத்த கண்காணிப்பு குழு அமைக்க வலியுறுத்தினர்.
திரண்டு வந்தனர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் இயக்குனர்கள் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு, தமிழக தமிழாசிரியர் கழகம், தமிழ்நாடு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் பயிற்றுனர்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டாக இணைந்து கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மாலை திரண்டு வந்தனர்.
ஒழுங்கு நடவடிக்கை
மேலும் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்தித்து அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கோரிக்கை தொடர்பாக ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழ்நாட்டில் கல்வி நிலையங்களில் சமூக கலாசார சீரழிவுக்கு உட்பட்டிருக்கும் மாணவர்களை நெறிப்படுத்துவதற்கு தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும், இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமரசமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, மாணவர்கள் சில தகாத எதிர்வினைகளில் ஈடுபடுகிறார்கள். மாணவர்களை நல்வழிப்படுத்தும் நிகழ்வுகளில், எதிர்பாராத நிலையில் மனவெழுச்சியின் காரணமாக மாணவர்கள் தம்மை தவறான செய்கைக்கு உட்படுத்திக்கொள்ளும் நிலையில், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பது இயல்பானதாகிவிட்டது.
ரத்து செய்ய வேண்டும்
இந்த செயல் கற்பித்தல் பணியோடு மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்த நெறிப்படுத்துதலை செய்யும் ஆசிரியர்களுக்கு இது தேவையற்ற செயல் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. எனவே வருங்கால சமூகத்திற்கு நல்ல குடிமகன்களை உருவாக்கும் ஆசிரியர்களின் செயலுக்கு இடையூறு ஏற்படா வண்ணம், வருங்காலத்தில் ஒழுங்கு நடவடிக்கைகளை முறைப்படுத்திட நடவடிக்கைகள் வேண்டும்.
புதுக்கோட்டை மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர் தற்கொலை சம்பவத்தில் தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
கண்காணிப்பு குழு
பள்ளிகளில் சமூக விரோதிகளால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும்.
மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைகளை முறைப்படுத்திட ஆசிரியர், பெற்றோர், காவல்துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்பில் கண்காணிப்புக்குழு ஏற்படுத்தி பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.