ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அலுவலரிடம் நகராட்சி கவுன்சிலர் மனு
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அலுவலரிடம் நகராட்சி கவுன்சிலர் மனு அளித்தார்.
திருப்பத்தூர் நகராட்சி 36-வது வார்டு கவுன்சிலரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவருமான மு.வெற்றிகொண்டான் மற்றும் 100-க்கும் மேற்பட்ட குள்ளாச்சாரிவட்டம் பொதுமக்கள் திரண்டு திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்துக்கு நேரில் வந்து அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் நகராட்சி 36-வது வார்டு குள்ளாச்சாரிவட்டம் மற்றும் திருத்திமேடு நகர் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு இலவச பட்டா கொடுக்கப்பட்டு, அங்கு மக்கள் பயன்பாட்டுக்கு பொது இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் நூலகம், ரேஷன் கடைகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்ட இடங்களை அளந்து தர வேண்டும்.
மேலும் குள்ளாச்சாரிவட்டம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும்.
மேற்கண்டவாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.