பூச்சிக்கொல்லி மருந்தை மானிய விலையில் வழங்க வேண்டும்


நெற்பயிர்களில் இலைபேன், குலைநோயால் மகசூல் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் பூச்சிக்கொல்லி மருந்தை மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நெற்பயிர்களில் இலைபேன், குலைநோயால் மகசூல் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் பூச்சிக்கொல்லி மருந்தை மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெற்பயிர்களில் நோய் தாக்குதல்

நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் சம்பா 70 முதல் 80 வயது கொண்ட பயிராகவும், தாளடி 30 முதல் 60 வயதுடைய பயிராகவும் உள்ளது. களை எடுப்பது, உரம் வைப்பது உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் ஒரத்தூர், செம்பியன்மகாதேவி, நிர்த்தனமங்கலம், வடவூர் என நாகை சுற்றுவட்டார பகுதிகளில் நெற்பயிர்களில் இலைபேன், இலை சுருட்டு புழு, குருத்துப்பூச்சி, குலைநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் நெற்பயிர்களுக்கு அதிக அளவில் பூச்சி மருந்தை தெளித்து, வருகின்றனர்.நோய் தாக்குதலால் மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மானிய விலையில் பூச்சிக்கொல்லி மருந்து

இதுகுறித்து ஒரத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி காளிமுத்து கூறுகையில்,

பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. தற்போது பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் நெற்பயிர்களில் இலைபேன், இலை சுருட்டு புழு, குருத்துப்பூச்சி, குலைநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.இந்த நோய்களில் இருந்து பயிரை காப்பாற்றுவதற்கு அதிக அளவில் தனியார் கடைகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி பயிர்களுக்கு தெளிக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது அவர்கள் வைப்பது தான் விலை என்பதால் வேறு வழியின்றி பூச்சி மருந்தை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளுக்கு மானிய விலையில் பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கப்பட்டது. அதேபோல பூச்சிக்கொல்லி மருந்துகளை அரசு மானிய விலையில் வழங்க வேண்டும் என்றார்.

பயிர்களின் வளர்ச்சி பாதிப்பு

திருக்குவளை அருகே ஆலங்குடியை சேர்ந்த கரிகாலன் கூறுகையில்,

ஆலங்குடி பகுதியில் உள்ள நெற்பயிர்களில் குலைநோய் தாக்கியுள்ளது.

நோய் பாதிக்கப்பட்ட பயிரின் நுனிப்பகுதிகளில் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. இதனால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. உரம் வாங்குவதற்கு தனியார் கடைகளுக்கு சென்றால் குருணை மருந்து, புண்ணாக்கு உள்ளிட்டவை வாங்கினால் தான் யூரியா உரம் தருவோம் என்று நிர்பந்தம் செய்கின்றனர். வேறுவழியின்றி ரூ.200 கூடுதலாக கொடுத்து உரத்தை வாங்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்களை தாக்கும் நோய்கள் குறித்து வேளாண்மை துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.


Next Story