கறம்பக்குடியில் மக்கள் மறியல் முயற்சி
அக்னி ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கறம்பக்குடியில் மக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.
கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி அக்னி ஆற்று படுகையில் ஈச்சன்விடுதியில் அரசு மணல் குவாரி அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் அழியும் அபாயம் இருப்பதாக கூறி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சமூகநீதி கழகத்தினருடன் இணைந்து திருமணஞ்சேரி, பட்டத்திகாடு, இலை கடிவிடுதி, கிராம மக்கள் சார்பில் கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் நேற்று சாலைமறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சமூக ஆர்வலர் துரைகுணா தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்திற்காக திரண்டு நின்றனர். அவர்களை சமாதானம் செய்த போலீசார் மறியல் முயற்சியை கைவிட செய்து கறம்பக்குடி தாலுகா அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். அங்கு தாசில்தார் ராமசாமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்ட குழு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று மணல் குவாரி அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாகவும், பொதுமக்களின் போராட்டம் குறித்து கலெக்டர் மற்றும் கனிம வளத்துறை மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்காத போராட்ட குழுவினர் பொதுமக்களை திரட்டி மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து பேச்சுவார்த்தையை முடித்து கொண்டு வெளியே சென்றனர்.