கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி


கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 21 Oct 2023 12:15 AM IST (Updated: 21 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பரவலாக மழை

திருமருகல் ஒன்றிய பகுதிகளில் காலை 8 மணி வரை நீடிக்கும் பனிப்பொழிவால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில நாட்களாக திருமருகல் ஒன்றிய பகுதிகள் முழுவதிலும் பரவலாக மழை பெய்தது.

இதனால் பனிப்பொழிவு ஓரளவு குறைவாக இருந்தது. ஆனால் தற்போது நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. காலை 8 மணி வரையிலும் நீடிக்கும் பனி மூட்டத்தால் எதிரே வருபவர்கள் கூட தெரியாத சூழல் நிலவுகிறது.

உறைய வைக்கும் குளிர்

நாகூர்-நன்னிலம் நெடுஞ்சாலையில் சாலையே தெரியாத அளவுக்கு பனி மூட்டம் அதிகமாக இருந்ததால், விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். அதேபோல் மாலை நேரத்திலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது.

இதனால் குழந்தைகள், முதியோர்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். மேலும் கொட்டும் பனி, உறைய வைக்கும் குளிர் காரணமாக ஸ்வெட்டர், சால்வை போன்ற கம்பளி உடைகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது. இனி வரும் நாட்களில் பனிப்பொழிவும், மழையும், குளிரும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story