முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்


முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்
x

முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

பெரம்பலூர்

தர்ப்பணம்

ஆண்டுதோறும் தை மாத அமாவாசையையொட்டி பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி நேற்று தை மாத அமாவாசையையொட்டி பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே புளியங்குளம் எனப்படும் நகராட்சி தெப்பக்குளம் அருகே உள்ள விநாயகர் கோவில் முன்பு பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதில் புரோகிதர்கள், சிவாச்சாரியார்கள் ஆகியோர் தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை வரிசையாக அமரவைத்து, அவர்களின் மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர். அப்போது அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் வேண்டி வழிபாடு செய்தனர். மேலும் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபட்டு, விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர்.

கூட்டம் குறைவு

ஏற்கனவே பொதுமக்களில் பெரும்பாலானோர் புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்ததால், நேற்று தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.


Next Story