தூத்துக்குடி புறநகர் பகுதியில் 11-வது நாளாக வடியாத மழைநீரால் வீடுகளில் முடங்கிய மக்கள்
மழைநீரை வெளியேற்றும் பணி போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாகவும், கோரம்பள்ளம் குளம் உடைந்ததாலும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாநகர பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டதால் மக்கள் 2 நாட்கள் வீடுகளில் முடங்கினர். அதன் பிறகு மழைவெள்ளம் படிப்படியாக வடிந்து, மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
எனினும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இன்றுடன் 11 நாட்கள் ஆகியும், தூத்துக்குடி புறநகர் பகுதிகளான முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், ரகுமத்நகர், தனசேகரன்நகர், அம்பேத்கர் நகர், மாப்பிள்ளையூரணி திரேஸ்நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாமல் உள்ளது. இந்த பகுதிகளில் 1 அடி முதல் 3 அடி வரை மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீரை வெளியேற்றும் பணி போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து நடந்து வருகிறது. 143 ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீர் 24 மணி நேரமும் வெளியேற்றப்பட்டு வருகின்றன.
மேலும், மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் பக்கிள் ஓடையில் சேர்ந்திருந்த கழிவுகளை பொக்லைன் எந்திரம் மூலம் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர். சில இடங்களில் தண்ணீர் செல்லும் பாதைகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, அவை உடனடியாக அகற்றப்பட்டு மழைநீர் தடையின்றி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. ஆனாலும் மழைநீர் வடியாததால் பலர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அதே நேரத்தில் மாடிகளில் இருக்கும் மக்கள் தொடர்ந்து வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.