ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள்


ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள்
x

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

தர்ப்பணம் கொடுத்தனர்

ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுக்க நேற்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். அதைத்தொடர்ந்து அங்குள்ள புரோகிதர்கள் உதவியுடன் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்தனர். பலர் அன்னதானம் வழங்கினர்.

மேலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் மாலை வரை மாம்பழச்சாலையில் இருந்து ஸ்ரீரங்கம் வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கருட மண்டப படித்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பக்தர்கள் காவிரியில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் பாரதிதாசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஒலிப்பெருக்கி மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்

புனித நீராடி, பிதுர்தர்ப்பணம் முடித்தவர்கள் அருகில் உள்ள கோவில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் உள்பட திருச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள முக்கிய கோவில்களில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

காவிரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவு செல்வதால் ஆற்றில் புனித நீராடுபவர்களின் பாதுகாப்பு கருதி படிக்கட்டு உள்ள பகுதியில் மட்டுமே பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பிறபகுதிகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தன. தீயணைப்புத்துறை வீரர்கள் லைப் ஜாக்கெட் மற்றும் மோட்டார் பொருத்திய ரப்பர் படகுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொட்டியம்

தொட்டியம் காவிரி ஆற்றில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தொட்டியம் கரையோரப் பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை காவிரி ஆற்றில் நடந்து சென்று நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story