கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை - சீமான் பேச்சு


கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை - சீமான் பேச்சு
x

திமுகவை அகற்றாமல் இந்த மண்ணில் நல்ல அரசியல் இருக்காது என்று சீமான் கூறினார்.

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திமுகவை சேர்ந்த நா.புகழேந்தி. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான தேமுதிக ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதனால் இங்கு திமுக , பாமக , நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் 20 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைந்தது. தேர்தல் நடத்தை விதிப்படி மாலை 6 மணிக்கு மேல் வாக்கு சேகரிக்க, பரப்புரை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் இருந்து வெளிமாவட்டங்களைச் சேர்ந்தோர் உடனடியாக வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை. நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் கேட்டு இருப்பார்கள். 60 ஆண்டு குப்பையை, 5 ஆண்டுகளில் அகற்றுவது சிரமம். நான் தமிழன் என்பதுதான், எனது அடையாளம்.

பலர் சாதியை இனம் என்று பேசி வருகின்றனர், அது தவறு. ஒரு மொழியை பேசும், குழுக்கள்தான் இனம். நான் போதிக்கும் போது உங்களுக்கு புரியாது, பாதிக்கும் போது உங்களுக்கு புரியும். இளையராஜா பெரும்பான்மை இந்து, அவரது மகன் இஸ்லாம் என்பதால் சிறுபான்மை. சாதி, மதம் எல்லாம் நேற்று வந்தது.

நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காதவர்கள் நிச்சயம் ஒருநாள் வெட்கப்படுவார்கள். சாதி, மதம், கடவுளை வைத்து அரசியல் செய்பவர்கள் மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை, திமுகவை அகற்றாமல் இந்த மண்ணில் நல்ல அரசியல் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story