மழைநீர் வடிகால் முறையாக அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
தஞ்சையில் மழைநீர் வடிகால் முறையாக அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சமரசம் செய்தனர்.
நாஞ்சிக்கோட்டை:
தஞ்சையில் மழைநீர் வடிகால் முறையாக அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சமரசம் செய்தனர்.
மழைநீர் வடிகால்
தஞ்சையில் இருந்து நாஞ்சிக்கோட்டைக்கு செல்லும் சாலை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகலப்படுத்தப்பட்டு, சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கருணாவதி நகர் அருகே சாலையில் மேற்கு பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்காமல், சாலையில் கிழக்குப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலோடு இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலை மறியல்
இதற்காக சாலையின் குறுக்கே வடிகால் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் போடுவதற்காக கம்பிகள் கட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அந்த பகுதி பொதுமக்கள் கண்டித்து நேற்று கருணாவதிநகர் பஸ் நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலை வரை தொடர்ந்து அமைக்க வேண்டும். சாலையின் குறுக்கே வடிகால் அமைக்க கூடாது. இந்த பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அதிகாரிகள் சமரசம்
மேலும் வாகனங்கள் செல்லாமல் இருக்க சாலையின் குறுக்கே தடுப்புகளை ஏற்படுத்தியும், கயிறு கட்டியும் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின்பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் தஞ்சை - நாஞ்சிக்கோட்டை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.