விழுப்புரம் தேவிகருமாரியம்மன் கோவிலில்உண்டியலை உடைத்து திருட முயன்றவருக்கு பொதுமக்கள் தர்ம அடி
விழுப்புரம் தேவி கருமாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்றவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
திருட முயற்சி
விழுப்புரம் தெற்கு ரெயில்வே காலனி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் அதன் பூசாரி, கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த கோவிலின் முன்புற பகுதியில் இருந்த உண்டியலை ஒருவர் உடைத்து அதிலிருக்கும் பணத்தை திருட முயன்றார். அந்த சமயத்தில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பொதுமக்கள் தர்ம அடி
உடனே அந்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் பிடிபட்ட நபரை விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையத்தை சேர்ந்த நாராயணன் மகன் சின்னையன் (வயது 40) என்பது தெரியவந்தது.
இதையடுத்து சின்னையனை போலீசார் கைது செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.