அரிசி மூட்டைகளை இறக்கவிடாமல் பொதுமக்கள் போராட்டம்


அரிசி மூட்டைகளை இறக்கவிடாமல் பொதுமக்கள் போராட்டம்
x

அரிசி மூட்டைகளை இறக்கவிடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

குன்னம்:

இறக்கவிடாமல் போராட்டம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் அண்ணா நகர் பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் 600-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ரேஷன் கடையில் அரிசி மூட்டைகளை இறக்குவதற்காக லாரி ஒன்று வந்தது. இதை அறிந்த பொதுமக்கள் அந்த லாரியில் இருந்து அரிசி மூட்டைகளை இறக்க விடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர்.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த குன்னம் மண்டல துணை தாசில்தார் சுதாகர், கிராம நிர்வாக அலுவலர் விக்கி மற்றும் போலீசார், அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தொடர்ந்து அந்த ரேஷன் கடைக்கு கடந்த 5 மாதங்களாக சாப்பிட முடியாத அளவிலான குண்டு அரிசியை வினியோகம் செய்தனர்.

பேச்சுவாா்த்தை

நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் சன்ன ரக அரிசியை வினியோகம் செய்யாமல், தொடர்ந்து குண்டு அரிசியை மக்களுக்கு வழங்கி வந்தனர். தற்போதும் குண்டு அரிசியைத்தான் வினியோகம் செய்ய வந்துள்ளீர்கள். எனவே இந்த லாரியில் கொண்டு வந்துள்ள குண்டு அரிசியை எடுத்துச் செல்லுங்கள், என்று பொதுமக்கள் கூறினர். அதற்கு மண்டல துணை தாசில்தார் சுதாகர், இந்த முறை லாரியில் வந்துள்ள அரிசியை இறக்குவதற்கு அனுமதி கொடுங்கள். அடுத்த முறை சன்ன அரிசியை வினியோகம் செய்து விடுகிறோம், என்று உறுதி அளித்தார். ஆனால் அப்பகுதி மக்கள் எங்களுக்கு இந்த அரிசி வேண்டாம். திருப்பி எடுத்துச் செல்லுங்கள். எங்களுக்கு சாப்பிடுவதற்கு உகந்த சன்ன அரிசியை வழங்க வேண்டும், என தொடர்ந்து வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

பரபரப்பு

இதைத்தொடர்ந்து அந்த ரேஷன் கடையில் இறக்கப்பட இருந்த அரிசு மூட்டைகளுடன், அந்த லாரி திரும்பி சென்றது. விரைவில் சன்ன அரிசியை வழங்குவதாக கூறியதன்பேரில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story