செங்கல்பட்டில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்
செங்கல்பட்டில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி மேற்பார்வையில் செங்கல்பட்டு போக்குவரத்து ஆய்வாளர் ஹமிதா பானு, திருக்கழுக்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் முரளி ஆகியோர் செங்கல்பட்டு பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறைகளை மீறி பள்ளி ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அதிக அளவில் பள்ளி மாணவ- மாணவிகளை ஏற்றி வந்த வாகனங்களை மடக்கி பிடித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 3 வாகனங்களை பரனூரில் உள்ள மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி அதன் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி கூறுகையில்:-
அரசு விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள், மற்றும் உரிமம் இல்லாத வாகனங்கள், பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றி செல்ல தடை விதிக்கப்பட்ட வாகனங்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்லும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். அரசு விதிமுறைகளை மீறி செயல்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.