மண்டபம் ரெயில் நிலையத்தில் போதிய மின்விளக்குகள் இல்லாததால் இருளில் தவிக்கும் பயணிகள்


மண்டபம் ரெயில் நிலையத்தில் போதிய மின்விளக்குகள் இல்லாததால் இருளில் தவிக்கும் பயணிகள்
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மண்டபம் ரெயில் நிலையத்தில் போதிய மின்விளக்குகள் இல்லாததால் இருளில் பயணிகள் தவிக்கும் நிலை உள்ளது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

மண்டபம் ரெயில் நிலையத்தில் போதிய மின்விளக்குகள் இல்லாததால் இருளில் பயணிகள் தவிக்கும் நிலை உள்ளது.

ரெயில் நிலையம்

சென்னை உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் மண்டபத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மண்டபம் ரெயில் நிலையத்தில் மின்விளக்கு உள்ளிட்ட கூடுதல் வசதிகள் இல்லாததால் ரெயில் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் கடலுக்குள் அமைந்துள்ள ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே பாம்பன் ரெயில் பாலத்தில் பயணிகள் ரெயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம் வரவேண்டிய அனைத்து ரெயில்களும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

அது போல் சென்னையிலிருந்து தினமும் ராமேசுவரத்திற்கு வரும் ரெயில்கள் மற்றும் தொலைதூரங்களில் வந்து ஒரு சில வெளிமாநிலங்களிலிருந்து வரக்கூடிய ரெயில்களும் மண்டபம் வரை இயக்கப்பட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றன.

இந்தநிலையில் மண்டபம் ரெயில்வே நிலையத்திலிருந்து தினமும் மாலை 6 மணிக்கு மற்றும் இரவு 8.30 மணிக்கு சென்னைக்கு ரெயில்கள் புறப்பட்டு செல்கின்றன. மண்டபம் ரெயில்வே நிலையத்தில் பிளாட்பாரங்களிலோ கூடுதலாக மின்விளக்கு, குடிதண்ணீர் வசதிகளோ எதுவும் இல்லாததால் ரெயில்களில் ஏறும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

நடவடிக்கை இல்லை

குறிப்பாக மாலை 6 மணிக்கு மேல் மண்டபம் ரெயில்வே நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் கூடுதலாக மின்விளக்குகள் எதுவும் இல்லாததால் சென்னை செல்லும் ரெயில்களில் ஏறும் பயணிகள் பிளாட்பாரங்களில் இருளிலேயே உட்கார்ந்து இருக்கும் நிலை உள்ளது. குறிப்பாக உடமைகளுடன் தங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறுவதற்கு கூட சிரமம் அடைந்து வருகின்றனர்.

மண்டபம் ரெயில் நிலையத்திலிருந்து சென்னை செல்லும் ரெயில்கள் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களும் புறப்பட்டு செல்லும் நிலையிலும் மண்டபம் ரெயில்வே நிலையத்தில் கூடுதலாக வசதிகள் செய்வதற்கோ, மின்விளக்குகள் ஏற்படுத்துவதற்கோ ரெயில்வே துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ரெயில் பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கோரிக்கை

ஆகவே பாம்பன் ரெயில்வே தூக்குபாலத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்து மீண்டும் ராமேசுவரம் வரை ரெயில் போக்குவரத்து தொடங்கும் வரை மண்டபம் ரெயில்வே நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் கூடுதலாக மின்விளக்குகள் வசதிகள் செய்வதற்கும், பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதிகள் ஏற்படுத்துவதற்கும் உடனடியாக ரெயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.


Next Story