நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு - காங்கிரஸ் விருப்பப் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளைக் கொண்ட பட்டியலை தயாரித்துள்ளது.
சென்னை,
மக்களவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் காங்கிரசில் தேசிய அளவில் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவும், தமிழகத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் தேர்தல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் தொகுதி பங்கீடு தொடர்பாக மேலிட பார்வையாளர் அஜோய் குமார் அண்மையில் ஆலோசனை நடத்தி இருந்தார். அதில், குறைந்தது 15 இடங்களையாவது கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த சூழலில் அகில இந்திய காங்கிரஸ் நியமித்த தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் இன்று பகல் 12 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர். அங்கு திமுக தொகுதி பங்கீட்டு குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் பேச உள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளைக் கொண்ட பட்டியலை தயாரித்துள்ளது.
இதன்படி கடந்தமுறை போட்டியிட்ட 9 தொகுதிகள் உள்பட மேலும் 12 தொகுதிகள் என மொத்தம் 21 தொகுதிகள் அடங்கிய விருப்பப் பட்டியலை திமுகவிடம் வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
கடந்த முறை போட்டியிட்ட 9 தொகுதிகள்:-
1. திருவள்ளூர்
2. கிருஷ்ணகிரி
3. ஆரணி
4. கரூர்
5. திருச்சி
6. சிவகங்கை
7. தேனி
8. விருதுநகர்
9. கன்னியாகுமரி
திமுகவிடம் கேட்க உள்ள மேலும் சில தொகுதிகள்:-
1. திருநெல்வேலி
2. ராமநாதபுரம்
3. தென்காசி
4. திண்டுக்கல்
5. திருவண்ணாமலை
6. தஞ்சாவூர்
7. மயிலாடுதுறை
8. பெரம்பூர்
9. கள்ளக்குறிச்சி
10. காஞ்சிபுரம்
11. தென் சென்னை
12. அரக்கோணம்