சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் பா.ஜனதா அரசு நிறைவேற்றி வருகிறது


சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் பா.ஜனதா அரசு நிறைவேற்றி வருகிறது
x
தினத்தந்தி 28 Jun 2023 9:17 PM IST (Updated: 29 Jun 2023 4:15 PM IST)
t-max-icont-min-icon

சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் பா.ஜனதா அரசு நிறைவேற்றி வருகிறது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.

திருப்பூர்

பா.ஜனதா பொதுக்கூட்டம்

பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் அவினாசி வ.உ.சி. திடலில் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.சங்கீதா கவுதமன் தலைமை தாங்கினார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் எம். கதிர்வேலன் வரவேற்றார். மாவட்ட பொது செயலாளர்கள் ஸ்ரீநந்தகுமார், சத்தியமூர்த்தி, சுபாஷ்சந்திரபோஸ், மாவட்ட துணைத் தலைவர்கள் சண்முகசுந்தரம், சண்முகம், நந்தினி ஆகியோர்முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

திட்டங்கள்

இந்தியாவை காக்க வந்த தெய்வமாக பிரதமர் மோடி உள்ளார். மோடி ஆட்சியில் போலி கியாஸ் இணைப்பை ஒழித்ததில் மட்டும் ரூ.3 லட்சம் கோடி நாட்டுக்கு மீதமானது. அந்தப்பணம் முழுவதும் உள்கட்டமைப்புக்காக செலவு செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு திட்டம் போட்டால் அந்த ஒரு ரூபாய் முழுவதுமாக நேரடியாக பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் செல்கிறது.

விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 46 லட்சம் பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 97,598 விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ. 6 ஆயிரம் கிடைக்கிறது. சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும்பா.ஜனதா அரசு நிறைவேற்றி வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கூடிய விரைவில் நாம் அயோத்தியில் தரிசனம் செய்ய இருக்கிறோம்.

தேர்தல்

திருப்பூரில் இருக்கும் பொருட்கள் அமெரிக்கா, கனடா போன்ற உலக நாடுகளுக்கு செல்கிறது. எங்கு பார்த்தாலும் தேசிய நெடுஞ்சாலைகள், விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து என அடுத்த 25 ஆண்டுகளுக்கு எப்படி இருக்கவேண்டும் என உலகத்திற்கு வழியாக விளங்க வேண்டும் என்று திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் தமிழுக்கு பெருமை சேர்த்து வருகிறார். வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் இந்தியா முழுவதும் 400-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவார். அதில் நீலகிரி தொகுதியின் பங்கும் இருக்க வேண்டும். அதற்கு நாம் கடினமாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அவினாசி நகர தலைவர் தினேஷ்குமார்,நிர்வாகிகள் கணேசன்(அவினாசி வடக்கு), கருணாநிதி (மேற்கு), ஜெகதீசன் (கிழக்கு), திருமுருகன்பூண்டி நகரம் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகரநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story