போதிய மழை இல்லாததால் குறைந்து வரும் பாபநாசம் அணை நீர்மட்டம்
போதிய மழை இல்லாததால் பாபநாசம் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.
விக்கிரமசிங்கபுரம்:
மேற்கு தொடர்ச்சி மலையில் தென் மாவட்டங்களின் பிரதான அணையான பாபநாசம் அணை உள்ளது. இந்த அணை தென்மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை தீர்க்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பாபநாசம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக தொடர் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர தொடங்கியது. சுமார் 100 அடியை எட்டும் நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் தற்போது போதிய மழை இல்லாத காரணத்தினால் அணைக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டம் குறைய தொடங்கியுள்ளது. அதாவது உச்சநீர்மட்டம் 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 96.95 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 462.04 கன அடி நீர்வரத்தும், அணையில் இருந்து 704.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.