வலைதள வீடியோக்கள் ஏற்படுத்திய பீதிவடமாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் அச்சுறுத்தலா?;அவர்களே மனம் திறக்கிறார்கள்


வலைதள வீடியோக்கள் ஏற்படுத்திய பீதிவடமாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் அச்சுறுத்தலா?;அவர்களே மனம் திறக்கிறார்கள்
x

வலைதள வீடியோக்கள் ஏற்படுத்திய பீதியால் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா என்று அவர்களே மனம் திறக்கிறார்கள்

ஈரோடு

தமிழ்நாட்டிற்கு வடமாநில தொழிலாளர்கள் வாழ்வாதாரம் தேடி சில ஆண்டுகளாக அதிக அளவில் வருகிறார்கள்.

வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் ஒரு நாள் கூலி அதிகமாக இருப்பதால் அவர்கள் அதிக அளவில் தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

அவர்களின் வருகை குறித்து சில விமர்சனங்களும் இருக்கின்றன. அவர்களின் அதிக வரவால் தமிழர்களின் வேலை வாய்ப்பு குறைந்துவிட்டதாக அரசியல் அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். இருந்தாலும் அவர்கள் இல்லை என்றால் கட்டிட வேலை, ஓட்டல் வேலை என்று எத்தனையோ வேலைகள் முடங்கிப் போகும் நிலைதான் இருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

பீதி ஏற்படுத்திய வீடியோக்கள்

பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இருந்து தினந்தோறும் ரெயில்கள் மூலமாக சென்னைக்கு சாரை சாரையாக வடமாநிலத்தவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட பெருநகரங்கள் தொடங்கி சிறு நகரங்கள், கிராமங்கள் வரை வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இப்போது வரை பெருகி கொண்டே வருகிறது.

இந்தநிலையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் இரு வீடியோக்கள் வெளியானது. பீகார் மாநில இளைஞர்கள் தாக்கப்படுவது போன்ற அந்த வீடியோக்கள் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தின. இது தமிழகத்தில் தங்கி பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் இடையே அச்சத்தையும் உண்டாக்கியது. இந்த வீடியோக்கள் போலியானவை என்றும், இதில் உண்மை கிடையாது என்றும் அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் விளக்கம் அளித்துள்ளார். ஈரோட்டில் தங்கி இருக்கும் பீகார் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள்? என்பதை அவர்களே தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

பாதுகாப்பாக இருக்கிறோம்

ஈரோட்டில் பழைய பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த தொழிலாளி நந்து:-

நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்தேன். ஈரோட்டில்தான் பணியை தொடங்கினேன். ஒரே இடத்தில் வேலை செய்து வருகிறேன். என்னைப்போல எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் உறவினர்கள் என 100 பேருக்கும் மேல் ஈரோட்டில் பல இடங்களில் பணி செய்கிறார்கள். இதுவரை எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

தினசரி வேலை, வேலைக்கான சம்பளம், உணவு தருகிறார்கள். நான் தீபாவளிக்கு கண்டிப்பாக எங்கள் சொந்த ஊருக்கு செல்வேன். அடுத்து 6 அல்லது 7 மாதங்களில் ஒரு முறை சென்று வருவேன். எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எங்கள் குடும்பத்தினரிடம் நாங்கள் பாதுகாப்பாக இருப்பதை கூறிவிட்டோம். நாங்கள் இங்கேயேதான் இருக்கிறோம்.

ஊருக்கு செல்லும் எண்ணம் இல்லை

உத்தரபிரதேச மாநிலம் காசி பகுதியை சேர்ந்த தொழிலாளி விஜய்:-

ஈரோட்டுக்கு வேலைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இங்கு எங்களை மிகவும் நன்றாக வைத்திருக்கிறார்கள். வேலை, உணவு, ஊதியம் அனைத்தும் சரியாக தருகிறார்கள். எங்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. வேலை முடிந்ததும் நாங்கள் கடைகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கிக்கொள்கிறோம். மகிழ்ச்சியாக இருக்கிறோம். இப்போதைக்கு ஊருக்கு செல்லும் எண்ணம் இல்லை. ஒரு ஆண்டில் 1 அல்லது 2 மாதங்கள் மட்டுமே ஊரில் இருப்போம். ஊருக்கு செல்வதாக கூறினால் எங்களை அனுப்பி வைக்கிறார்கள். அங்கு சென்றாலும் வேறு வழி இல்லாததால் விடுமுறை முடிந்து உடனடியாக தமிழ்நாட்டுக்கு திரும்பி விடுவோம். என்னைப்போல் எங்கள் ஊரை சேர்ந்த ஏராளமானவர்கள் ஈரோட்டில் இருக்கிறார்கள். யாரும் இப்போது ஊருக்கு செல்லும் எண்ணத்தில் இல்லை.

சரியான நேரத்தில் சாப்பாடு...

பீகாரை சேர்ந்த தொழிலாளி கவுரப்:-

நான் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டுக்கு வந்து வேலையில் சேர்ந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இங்கு இருக்கிறோம். எங்களை மிகவும் அன்பாக பார்த்துக்கொள்கிறார்கள். சரியான நேரத்தில் சாப்பாடு கிடைக்கிறது. சம்பளம் எங்கள் ஊரில் கிடைப்பதை விட அதிகமாகவே கிடைக்கிறது. விடுமுறை தேவை என்றால் எடுத்துக்கொள்ளலாம். எங்களுக்கு எந்த பிரச்சினையோ, மிரட்டல்களோ இங்கு கிடையாது.

இவ்வாறு வடமாநில தொழிலாளர்கள் கூறினர்.

பாகுபாடு கிடையாது

ஈரோடு சங்குநகர் பகுதியில் வடஇந்திய தொழிலாளர்களை வைத்து தொழில் நடத்தி வரும் கணேசன் என்பவர் கூறியதாவது:-

வட இந்தியர்களை இங்கு உள்ள யாரும் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் பார்ப்பதில்லை. எங்கள் நிறுவனத்தின் தொழிலாளர்களாக பார்க்கிறோம். நமது தொழிலாளர்களுக்கு என்ன கூலியோ, அதை அவர்களுக்கு தருகிறோம். இதில் பாகுபாடு கிடையாது. உள்ளூர் தொழிலாளர்களாக இருந்தால் அடிக்கடி விடுமுறை போடுவார்கள். இவர்கள் அந்த அளவுக்கு விடுமுறை போடுவது இல்லை. வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்கிறார்கள். சனிக்கிழமை மாலையில் சமபளம் கொடுத்து விடுவோம். ஞாயிற்றுக்கிழமை முழு ஓய்வு வழங்கப்படுகிறது. தங்கும் இடம், அரிசி, சமையல் கியாஸ், இலவசமாகவே கொடுக்கிறோம். காய்கறிகள், கறி உள்ளிட்டவை அவர்களின் விருப்பம் போல வாங்கிக்கொள்கிறார்கள்.

1 லட்சம் பேர்

ஒவ்வொரு தொழிலாளிக்கும் எங்கள் நிறுவனத்தின் முகவரியுடன் அட்டை கொடுத்து இருக்கிறோம், இதுபோல் ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடைகள், ஓட்டல்கள் என்று பல்வேறு இடங்களில் வேலை செய்கிறார்கள். ஈரோடு மாவட்டம் என்று எடுத்துக்கொண்டால் வடமாநில தொழிலாளர்கள் 1 லட்சம் பேர் இருப்பார்கள். அவர்கள் மட்டும் இல்லை என்றால் அத்தனை தொழிலும் முடங்கி விடும்.

வதந்தி

தொழில்களை முடக்கவே இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறார்கள். வடமாநில தொழிலாளர்களை பொறுத்்தவரை வேலை முடிந்து விட்டால் அவர்களுக்கு பொழுதுபோக்கு செல்போன்தான். அதில் இணையங்கள் மூலம் பரபரப்பட்ட வதந்தி, எங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களையும் பாதித்தது. சிலர் பயத்தில் ஊருக்கு செல்கிறோம் என்றார்கள். அவர்களிடம் பேசி உண்மையை புரிய வைத்திருக்கிறோம். இனிமேலும் இதுபோன்ற வதந்திகள் பரவுவது உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story