ரூ.3¾ கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி


ரூ.3¾ கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி
x
தினத்தந்தி 4 Oct 2023 12:15 AM IST (Updated: 4 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் ரூ.3 கோடி 70 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணியினை மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர்

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கடந்த 1967 ஆண்டு அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி மூலம் திறக்கப்பட்டது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்போது மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டிட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா அரசுக்கு பரிந்துரை செய்தார்.

ரூ.3 கோடியே 70 லட்சம்....

இதனையடுத்து திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.3 கோடியே 70 லட்சம் நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியை கொண்டு புதிய ஊராட்சி ஒன்றிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன் தலைமையில் பூமி பூஜைகளுடன் தொடங்கப்பட்டது.

17 ஆயிரத்து 300 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளமாக அனைத்து நிர்வாக வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளை திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா உடனிருந்தார். மேலும் கட்டுமான பணிகளை விரைந்து முடித்திட தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம், சிவநேசன், என்ஜினீயர் சிதம்பரம் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story