கோவை வழியாக பாலக்காடு - ஈரோடு ரெயில் நாளை முதல் மீண்டும் இயக்கம்
பாலக்காடு - ஈரோடு மெமு ரெயில் நாளை ஜூலை 29-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
கோவை,
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு பாலக்காட்டில் இருந்து கோவை வழித்தடத்தில் ஈரோட்டுக்கு இயக்கப்பட்டு வந்த மெமு ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரெயில் இயக்கப்படவில்லை. இந்நிலையில் பாலக்காடு, கோவை, திருப்பூரில் இருந்து பணிக்கு செல்வோா், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வசதிக்காக இந்த ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத் தொடா்ந்து பாலக்காடு - ஈரோடு மெமு ரெயில் நாளை ஜூலை 29-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாளை ஜூலை 29-ந் தேதி முதல் வியாழக்கிழமைகள் தவிர பிற்பகல் 2.52 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் மெமு ரெயில் (06818) இரவு 7.10 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்தை சென்றடையும். ஜூலை 30-ந் தேதி முதல் வியாழக்கிழமைகள் தவிர காலை 7.15 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் மெமு ரெயில் (எண்: 06819) காலை 11.45 மணிக்கு பாலக்காடு டவுன் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரெயிலானது தொட்டிபாளையம், பெருந்துறை, ஈங்கூா், விஜயமங்கலம், ஊத்துக்குளி, திருப்பூா், வஞ்சிபாளையம், சோமனூா், சூலூா் சாலை, இருகூா், சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை, கோவை, போத்தனூா், மதுக்கரை, எட்டிமடை, வாளையாறு, கஞ்சிக்கோடு உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதேபோன்று ஈரோடு-கோவை மெமு ரெயில் (நாளை) ஜூலை 29-ந் தேதி முதல் நேரம் மாற்றி இயக்கப்படுகிறது.
அதன்படி ஈரோடு-கோவை மெமு ரெயில் (06801) காலை 7.15-க்கு பதிலாக 7.50-க்கு புறப்படும். இந்த ரெயில் 10.15 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரெயிலானது தொட்டிபாளையம், பெருந்துறை, ஈங்கூா், விஜயமங்கலம், ஊத்துக்குளி, திருப்பூா், வஞ்சிபாளையம், சோமனூா், சூலூா் சாலை, இருகூா், சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.