கும்மிடிப்பூண்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெயிண்டர் ரெயில் மோதி சாவு


கும்மிடிப்பூண்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெயிண்டர் ரெயில் மோதி சாவு
x

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமையொட்டி உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெயிண்டர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்தவர் வவுனியாவை சேர்ந்த விஜயகுமார் (வயது 23). இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நேற்று முன்தினம் இரவு, கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமையொட்டி உள்ள ரெயில்வே தண்டவாளத்தை விஜயகுமார் கடக்க முயன்றார். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் விஜயகுமார் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்- வேப்பம்பட்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று மதியம் சென்னையிலிருந்து அரக்கோணம் மார்க்கமாக வந்த புறநகர் மின்சார ரெயிலில் வந்து கொண்டிருந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஓடும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருவள்ளூர் ரெயில்வே போலீசார் ஆம்புலன்ஸ்சை வரவழைத்து பரிசோதனை செய்தனர். அதில் அவர் இறந்து விட்டது தெரிய வந்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பெண் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. உடலில் நீல நிற குதிரை படம் போட்ட சுடிதார், கத்தரிப்பு கலரில் லெக்கின்ஸ் அணிந்திருந்தார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story