நெல் கொள்முதல் தங்கு தடையின்றி செய்யப்படுகின்றது - அமைச்சர் சக்கரபாணி
நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான இடங்களில் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் தங்கு தடையின்றி செய்யப்படுகின்றது என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
சென்னை,
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்பு நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இரண்டு விவசாயிகள், வேளாண்மை இணை இயக்குனர், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் / மண்டல மேலாளர், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் நாளன்று தொடங்கும் நெல் கொள்முதல் பணியானது, உழவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு மாதம் முன்னதாகவே செப்டம்பர் முதல் நாள் முதல் நெல் கொள்முதல் செய்திட மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 01.09.2023 முதல் நாளது தேதி வரை 5,54,874 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 87,811 விவசாயிகளுக்கு ரூ. 1,257.81/- கோடி அவர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது காவிரி பாசன மாவட்டங்களில் (Delta Districts) சம்பா அறுவடைப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நெல்வரத்து வர துவங்கியுள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டுத் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. காவிரி மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 957 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு 195 நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்கள் நெல்லை எப்போது கொண்டுவந்தாலும் கொள்முதல் செய்ய இவை தயார் நிலையில் உள்ளன.
12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்-அமைச்சர் மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க ஆணையிட்டுத் தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிண்டால் ஒன்றிற்கு சன்னரக நெல்லுக்கு மாநில அரசின் பங்களிப்பு ரூ.107/-ம் சேர்த்து ரூ.2,310/-க்கும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு மாநில அரசின் பங்களிப்பு ரூ.82/-ம் சேர்த்து ரூ.2.265/-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
நெல் கொள்முதல் தொடர்பாக விவசாயிகள் புகார் தெரிவிக்கும் பொருட்டு கட்டணமில்லா தொலைபேசி எண் (உழவர் உதவி மையம்) 1800 599 3540 மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய துறை உயர் அலுவலர்களின் அலைபேசி எண்கள் கொண்ட அறிவிப்புப் பதாகையும் புகார் பெட்டியும் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் தன் டிவிட்டர் பக்கத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் சரியாகத் திறக்கப்படுவதில்லை என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின் படி தேவைப்படும் இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் உடனுக்குடன் திறந்து நெல் கொள்முதல் செய்யப்படும் விவரம் அந்தந்தப் பகுதி நெல் விவசாயிகளுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.
இன்று (25.01.2024) தலைமைச் செயலாளரால் காணொலி வாயிலாக நடத்தப்பட்ட காவிரிப் பாசன மாவட்ட ஆட்சித்தலைவர்களின் கூட்டத்திலும் நெல் கொள்முதல் நிலையங்களைத் தேவைப்படும் இடங்களில் விரைந்து திறந்து நெல் கொள்முதல் செய்திட வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் தங்கள் நெல்லினை இவற்றில் விற்றுப் பயன் பெற்றிடக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.