ரூ.22½ லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பகுதிநேர ரேஷன்கடை
சிறுவானூர் ஊராட்சியில் ரூ.22½ லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பகுதிநேர ரேஷன்கடை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுவானூர் ஊராட்சியில் ரூ.22 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பகுதிநேர ரேஷன்கடை மற்றும் மின்கம்பங்களுடன் கூடிய தெருமின்விளக்கு திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, கூடுதல் கலெக்டர் சித்ராவிஜயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவசக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பாரதி மோகன்ராஜ் வரவேற்றார். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பகுதிநேர ரேஷன்கடை மற்றும் மின்கம்பங்களுடன் கூடிய தெருமின்விளக்கு ஆகியவற்றை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார். அப்போது, சிறுவானூர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எல்லிஸ் சத்திரத்தில், புதியதாக அணைக்கட்டு கட்டுவதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை தேவைகள் எதுவாக இருந்தாலும் அனைத்தும் நிறைவேற்றித்தரப்படும் என்றார்.
இதில் மாவட்ட ஆவின் தலைவர் தினகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன், தி.மு.க. நகர செயலாளர் பூக்கடை கணேசன், ஒன்றியக்குழு துணை தலைவர் கோமதி நிர்மல்ராஜ், மாவட்ட பிரதிநிதி மோகன்ராஜ், பக்தவசலு, முன்னாள் கவுன்சிலர் கலியபெருமாள், தலைமை கழக பேச்சாளர் பரசுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.