வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் - தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
கொசு பரவலை கட்டுப்படுத்த வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்
சென்னை,
கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆலப்புழா, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நோய் பரவல் அதிகரித்து காணப்படுகிறது.
எனினும் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும், அதேசமயம் கவனத்துடன் இருக்குமாறும் அம்மாநில அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என அம்மாநிலஅரசு மக்களை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய ஆசிய பகுதிகளில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் தற்போது வரை வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் என்பது கண்டறியப்படவில்லை.
வெஸ்ட் நைல் வைரஸ் என்பது பறவைகளிடம் இருந்து கொசுக்களுக்கு, கொசுக்களிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது. க்யூலெஸ் வகை கொசுக்களால் மனிதர்களுக்கு வெஸ்ட் நைல் வைரஸ் பரவக்கூடும். மனிதர்களுக்கிடையே பரவும் தன்மை இல்லையென்றாலும், கொசு பரவலை கட்டுப்படுத்த சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
வைரஸ் தொற்றுக்கு ஆளாபவர்களில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை. எலைசா, பி.சி. ஆர் பரிசோதனை மூலமாக வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறியலாம். காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும்.
வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கவாதம், கழுத்து விரைப்பு, மூளைக்காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கொசு பரவலை கட்டுப்படுத்த வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.