கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்


கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 11 July 2023 5:51 PM IST (Updated: 11 July 2023 6:40 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடி அருகே உள்ள கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

வேலூர்

காட்பாடி அருகே உள்ள கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

முருகன் கோவில்

காட்பாடியை அடுத்த 55 புத்தூர் கிராமத்தில் அசரீர் மலை முருகன் கோவில் உள்ளது.

ஆடி கிருத்திகை, தைப்பூசம் உள்ளிட்ட விழாக்கள் மட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் கிருத்திகை, சஷ்டி தினத்தன்று இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த கோவிலை பொதுமக்கள் நிர்வகித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டுக்கு எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள், இந்து முன்னணியினருடன் சேர்ந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

இதனை முன்னிட்டு அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

முற்றுகை போராட்டம்

இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் பொதுமக்கள் சத்துவாச்சாரி மேம்பாலத்தில் இருந்து, கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அங்கு அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என்றனர். இதையடுத்து பொதுமக்களில் சிலர் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க போலீசார் அனுமதி அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் பராமரித்து வரும் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டனர்.. இந்த கோவிலை தொடர்ந்து பொதுமக்களே நிர்வகிக்க அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு இதில் கூறப்பட்டிருந்தது.


Related Tags :
Next Story