ஜே.இ.இ. தேர்வு இல்லாமல் சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்க வாய்ப்பு - 4 ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் படிப்பு அறிமுகம்


ஜே.இ.இ. தேர்வு இல்லாமல் சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்க வாய்ப்பு - 4 ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் படிப்பு அறிமுகம்
x

12-ம் வகுப்பு முடித்தவர்கள் எலக்ட்ரானிக்ஸ் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது.

சென்னை,

இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி. பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஜே.இ.இ. தேர்வு இல்லாமல் சென்னை ஐ.ஐ.டி.யில் 4 ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த கல்லூரியின் பேராசிரியர் ஆண்ட்ரூஸ் தங்கராஜ் இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர், இந்த படிப்பில் சேர்வதற்கு வயது வரம்பு கிடையாது என்றும், 12-ம் வகுப்பு முடித்த யார் வேண்டுமானாலும் இந்த படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே வேறு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும், இந்த எலக்ட்ரானிக்ஸ் படிப்பை 2 ஆண்டுகளுக்கு டிப்ளமோ படிப்பாக படிக்கலாம் என்று அவர் கூறினார். அதே போல் ஒரு வருடம் மட்டும் படித்தாலும் அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றும், இதில் கிடைக்கும் சான்றிதழின் அடிப்படையில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த படிப்பு ஆன்லைன் மூலம் கற்பிக்கப்படும், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் தேர்வை தேர்வு மையத்திற்குச் சென்று எழுத வேண்டும். மேலும் ஆய்வகத்தை பயன்படுத்துவதற்கு சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திற்கு வர வேண்டும் என்று பேராசிரியர் ஆண்ட்ரூஸ் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.



Next Story