கோடை விடுமுறை முடிந்துஎல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டனஇனிப்பு கொடுத்து மாணவ- மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ந் தேதியன்றும், எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை 14-ந் தேதியன்றும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டது.அதன்படி கடந்த 12-ந் தேதியன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி அனைத்து பள்ளிகளையும் தூய்மைப்படுத்தும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்தது.
பள்ளிகள் திறக்கப்பட்டன
இதனை தொடர்ந்து எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகளுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகளுக்கு 835 அரசு தொடக்கப்பள்ளிகளும், 154 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளும், 143 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 1,132 பள்ளிகள் திறக்கப்பட்டன.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவ- மாணவிகளை உற்சாகமாகவும், இன்முகத்துடனும் வரவேற்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. 1½ மாத கால கோடை விடுமுறை முடிந்து மாணவ- மாணவிகள் நேற்று தங்கள் பெற்றோர்கள், பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்று மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் சீருடையில் பள்ளிக்கு வந்தனர். ஒரு சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து அழுது அடம்பிடித்தனர். அவர்களை பெற்றோர்கள் தூக்கிக்கொண்டு வந்து பள்ளியில் விட்டுச்சென்றதை காண முடிந்தது.
இனிப்பு கொடுத்து வரவேற்பு
மேலும் பல பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சாக்லெட் போன்ற இனிப்புகளை கொடுத்தும், ரோஜாப்பூ கொடுத்தும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
அதேபோல் பள்ளிகள் தொடங்கிய முதல் நாளிலேயே மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் போன்ற கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. நேற்று முதல் நாள் என்பதால் பெரும்பாலான பள்ளிகள் அரை நாள் மட்டுமே நடந்தது.
உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொருத்தவரை 522 அரசு தொடக்கப்பள்ளிகள், 72 நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என ஆக மொத்தம் 699 பள்ளிகள் நேற்று காலை திறக்கப்பட்டது. எல்.கே.ஜி வகுப்பு முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். பெரும்பாலான பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பூங்கொத்து, இனிப்பு கொடுத்தும் வரவேற்றதை காண முடிந்தது.