பூசாரி மட்டும் தீ மிதித்தார்தாளவாடி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா


பூசாரி மட்டும் தீ மிதித்தார்தாளவாடி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
x
தினத்தந்தி 10 March 2023 2:41 AM IST (Updated: 10 March 2023 3:23 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவில் பூசாரி மட்டும் தீ மிதித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவில் பூசாரி மட்டும் தீ மிதித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாரியம்மன் கோவில்

ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடியில் கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள மலை கிராமம் தாளவாடி. இங்கு பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு மலர் மற்றும் ஆபரணங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி கும்டாபுரத்தில் இருந்து மாரியம்மன் தாளவாடி மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் தாளவாடி மாரியம்மன், கும்டாபுரம் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

வீதி உலா

தொடர்ந்து இரவு 9 மணிக்கு அம்மன் வீதி உலா தொடங்கியது. அப்போது அம்மனின் உற்சவ சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டது. இதையடுத்து தாளவாடியில் உள்ள அனைத்து வீதிகளிலும் அம்மன் வீதி உலா நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு கோவிலின் முன்பு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. இதற்காக குண்டத்தில் போடப்பட்ட விறகுகள் முழுமையாக எரிந்து 30 அடி நீளத்தில் 4 அடி உயரத்தில் குண்டம் நேற்று காலை தயார் செய்யப்பட்டது.

பின்னர் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சிலைகள் தாளவாடியில் உள்ள ஆற்றுக்கு புறப்பட்டது. அப்போது கோவிலின் தலைமை பூசாரி சிவண்ணா தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆற்றுக்கு சென்றனர். அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து அம்மன் சிலையை பூசாரி சிவண்ணா தலையில் சுமந்து அம்மனை அழைத்து வந்தார்.

சாமி வேடங்கள் அணிந்த பக்தர்கள்

அப்போது ஏராளமான பக்தர்கள் விநாயகர், சிவன், பார்வதி, முருகன் உள்பட பல்வேறு தெய்வங்களின் வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்தனர். மேலும் பக்தர்கள் பலர் காவல் தெய்வங்கள் வேடம் அணிந்து நடனமாடி வந்தனர். இதே போல் குறவர் ஆட்டம் ஆடிக்கெண்டு சில பக்தர்கள் ஊர்வலத்தில் வந்தனர்.

ஆற்றை கடந்து ஊர்வலம் வந்தபோது அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு காத்திருந்த பெண்கள் மலர் மற்றும் பழங்கள் வைத்து மாரியம்மனை வரவேற்றனர். பின்னர் தாளவாடி பஸ் நிலையம் பகுதியில் மாரியம்மனுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தலமலை ரோடு, ஓசூர் ரோடு வழியாக அம்மன் ஊர்வலம் சென்றது. பின்னர் அங்கிருந்து அம்மன் ஊர்வலம் போயர் வீதி, மற்றும் அம்பேத்கர் வீதிக்கு சென்றது. அங்கு மலர்களால் பக்தர்கள் பாதை அமைத்து அம்மனை வரவேற்றனர். இதையடுத்து மாரியம்மன் அங்கிருந்து ஊர்வலமாக கோவில் வளாகத்தை சென்றடைந்தது.

பக்தி கோஷங்கள்

கோவில் வளாகத்தில் மேளதாளங்கள், தப்பட்டைகள் முழங்க தலைமை பூசாரி சிவண்ணா மாரியம்மன் உற்சவ சிலையை சுமந்தபடி குண்டத்தை நோக்கி விரைந்து சென்றார்.

இந்த கோவிலில் தலைமை பூசாரி சிவண்ணா மட்டுமே குண்டம் இறங்கி தீ மிதிப்பார். மற்ற பக்தர்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதி கிடையாது. எனவே குண்டம் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில பக்தர்கள் திரண்டிருந்தனர். குண்டத்தை பூசாரி நெருங்கியதை கண்டதும் அங்கு கூடி இருந்த பக்தர்கள் விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பினர்.

தீ மிதித்தார்

இதையடுத்து 30 அடி நீளம், 4 அடி உயரம் உள்ள குண்டத்தில் தலைமை பூசாரி சிவண்ணா இறங்கி தீ மிதித்தார். குண்டத்தில் பூசாரி தீ மிதித்தபோது வானில் கருடன் வலம் வந்தது. இதை கண்டதும் பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்கினர். குண்டம் இறங்கிய பூசாரி சிவண்ணா நேராக கோவில் கருவறைக்கு சென்றார். கருவறைக்குள் பூசாரி சென்றதும், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பூஜைகள் முழுவதும் கர்நாடக மாநில முறையில் நடைபெற்றது. இதனால் அந்த பகுதி முழுவதும் சாம்பிராணி மணக்க, ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும் அங்கு கூடியிருந்த பக்தர்கள், கையில் இருந்த பூ மாலை, வேப்பிலை, உப்பு, சாம்பிராணி ஆகியவற்றை குண்டத்தில் வீசினர். பின்னர் சிறப்பு பூஜையுடன் கோவில் விழா நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மத நல்லிணக்கத்துக்கு...

இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா ராகவேந்திரா கூறுகையில், 'தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் விழா 200 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோவிலின் குண்டம், இங்குள்ள மசூதி வரை அமைக்கப்பட்டிருக்கும். எனவே இந்த கோவில் குண்டம் விழா மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது,' என்றார்.

விழாவையொட்டி தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வன் தலைைமயில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story