தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 29 ஆயிரம் பேர் மட்டுமே தகுதி தேர்வில் தேர்ச்சி; ஐகோர்ட்டில் அரசு விளக்கம்
தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில், 28 ஆயிரத்து 984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர் என்று ஐகோர்ட்டில் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள்
சென்னை ஐகோர்ட்டில், ராணிப்பேட்டையை சேர்ந்த ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். ஆனால், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சுமார் 13 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைத்துள்ளது. பட்டதாரிகள், வீடு தேடி வரும் கல்வி திட்டத்தில் பணியாற்றுபவர்களை எல்லாம் தற்காலிகமாக நியமிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்
முடிவு எடுக்கக்கூடாது
அந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், "தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உள்ளிட்ட தகுதிகளை கொண்டவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கலாம். ஆனால், பட்டப்படிப்பை மட்டும் முடித்தவர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் விண்ணப்பம் செய்தால், அந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். அந்த விண்ணப்பங்கள் மீது முடிவு எடுக்கக்கூடாது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
எத்தனை பேர்?
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக் கல்வித்துறை தரப்பில், ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட புதிய சுற்றறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக கடந்த 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அதில், 28 ஆயிரத்து 984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்" என்று கூறியிருந்தார்.
தள்ளிவைப்பு
அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்வு நடைமுறைகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தெரிவிப்பதற்காக வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் பரிசீலிக்க வேண்டும் என்று மீண்டும் உத்தரவு பிறப்பித்தார்.