திருவள்ளூரில் ஒருவர் உயிரிழப்பு: தமிழ்நாட்டில் 40 பேருக்கு கொரோனா


திருவள்ளூரில் ஒருவர் உயிரிழப்பு: தமிழ்நாட்டில் 40 பேருக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் நேற்று 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. கொரோனாவிற்கு தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்பட்டு படிப்படியாக கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது.

இதனையடுத்து, மீண்டும் உருமாறிய புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. கேரளாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு வேகமாக பரவ தொடங்கியது. அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது.

ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. நீண்ட நாட்களாக கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி (வயது 55) என்பவர் உயிரிழந்தார்.

ஒருவர் மரணம்

இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 36 வயது ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழ்நாட்டில் நேற்று 331 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் 25 பேர், செங்கல்பட்டில் 6 பேர், காஞ்சீபுரத்தில் 4 பேர், திருவள்ளூரில் 2 பேர், கோவை, நாமக்கல், சேலம், ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 23 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story