நாமக்கல்லில் சாலை பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு


நாமக்கல்லில் சாலை பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு
x

நாமக்கல்லில் சாலை பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.

நாமக்கல்,

நாமக்கல் கிரீன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 49). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வந்த ரமேஷ் வீட்டு வேலைகளை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு ரமேஷ் காட்டுப்புத்தூரில் இருந்து நாமக்கல்லில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். என்.புதுப்பட்டி பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ரமேஷ் இரவு நேரம் மற்றும் மழை பெய்து வந்ததால் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த அடிப்பட்டு ரமேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இன்று காலையில் அப்பகுதி மக்கள் பள்ளத்தில் ரமேஷ் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சாலை பணிகள் நடைபெறும் நிலையில் அந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.


Next Story