வீட்டில் தீப்பிடித்த சம்பவத்தில் மேலும் ஒரு வாலிபர் சாவு - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
வீட்டில் தீப்பிடித்த சம்பவத்தில் மேலும் ஒரு வாலிபர் உயிரிழந்தார்.
கோவை,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த 7 பேர், கோவை சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தனர். இவர்களில் 5 பேர் பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர்களாக வேலை பார்த்தனர். 2 பேர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
15-ந் தேதி இரவில் வீட்டில் இருந்த 10 லிட்டர் பெட்ரோலை மற்றொரு கேனுக்கு மாற்றினர். அப்போது அங்கு கியாஸ் அடுப்பில் சமையல் பணியும் நடந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது கேனில் இருந்து பெட்ரோல் கியாஸ் அடுப்பில் தெறித்ததால் தீப்பிடித்தது.
இதனால் வீடு முழுக்க தீப்பற்றி எரிந்தது. இதில் ஆண்டிப்பட்டி கடமலைக்குன்றுவைச் சேர்ந்த அழகர்ராஜா (வயது 30), சின்னக்கருப்பு, முத்துக்குமார் ஆகிய 3 பேர் தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் பாண்டீஸ்வரன், தினேஷ்குமார், மனோஜ், வீரமணி ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வீரமணி (23) என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் தீ விபத்தில் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பலியான வீரமணி டேங்கர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். சூலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.