அண்ணா சாலையில் கட்டிடம் இடிந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில் மேலும் ஒருவர் கைது


அண்ணா சாலையில் கட்டிடம் இடிந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

அண்ணா சாலையில் கட்டிடம் இடிந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை ஆயிரம்விளக்கு அண்ணா சாலை பகுதியில் பழைய கட்டிடத்தை இடித்தபோது, திடீரென்று கட்டிடத்தின் ஒரு பகுதி பிளாட்பாரத்தில் விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச்சேர்ந்த பெண் என்ஜினீயர் பத்மபிரியா பரிதாபமாக இறந்து போனார். விக்னேஷ்குமார் என்ற இளைஞர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம்விளக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் இந்திய தண்டனை சட்டம் 304 என்ற கடுமையான சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஜே.சி.பி. எந்திர உரிமையாளர் ஞானசேகரன். ஜே.சி.பி.எந்திர டிரைவர் பாலாஜி மற்றும் கட்டிட இடிக்கும் பணி மேற்பார்வையாளர் ஜாகீர்உசேன் ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று கட்டிட இடிக்கும் பணியின் ஒப்பந்ததாரர் அப்துல்ரகுமான் என்பவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கட்டிட உரிமையாளர் உள்பட மேலும் இருவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் கூறினார்கள்.


Next Story