திரைப்பட இயக்குனருக்கு ஒரு மாதம் சிறை: ஐகோர்ட்டு அதிரடி


திரைப்பட இயக்குனருக்கு ஒரு மாதம் சிறை: ஐகோர்ட்டு அதிரடி
x

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சினிமா இயக்குனருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நடிகர் பிரஜன் நடித்த திரைப்படம் 'டி3'. இந்த படத்தை பாலாஜி என்பவர் இயக்க, மனோஜ் என்பவர் தயாரித்து இருந்தார். இந்த படத்தை தயாரிக்க சாமுவேல் காட்சன் என்பவரிடம் ரூ.4 கோடி மனோஜ் கடன் பெற்று இருந்தார். அப்போது படத்தின் உரிமையில் 60 சதவீதத்தை சாமுவேலுக்கு வழங்குவதாக ஒப்பந்தமும் செய்தார்.

ஆனால், ஒப்பந்தத்தை மீறி படத்தை மனோஜ் வெளியிட்டார். இதை எதிர்த்து சாமுவேல் காட்சன் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 'டி3' படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடை விதித்தது. படத்தின் மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை மீறி படத்தை ஓ.டி.டி. தளத்தில் மனோஜ் வெளியிட்டார். இதையடுத்து, படத்தின் இயக்குனர் பாலாஜி, தயாரிப்பாளர் மனோஜ் ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட்டில் சாமுவேல் காட்சன் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வக்கீல் தங்கசிவம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை நேரில் ஆஜராகும்படி நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டார்.

அதன்படி இயக்குனர் பாலாஜி நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, பின்னர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அதேபோல, நேரில் ஆஜராகாத தயாரிப்பாளர் மனோஜுக்கு எதிராக பிடிவாரண்டை பிறப்பித்து, உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story