சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்: இன்று மாலை மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு
பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை இன்று மாலை மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
திருச்சி,
ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்பட்ட நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையே அதே சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அத்துடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை திருச்சி மாவட்ட சைபர்கிரைம் வழக்கிலும் போலீசார் கைது செய்தனர். மேலும் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் வழக்கில் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்கவும், 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திருச்சி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம் திருச்சி கூடுதல் மகிளா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதற்காக கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுக்கு சங்கரை பெண் போலீசார் நேற்று முன்தினம் காலை திருச்சிக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் அடைக்கவும், போலீஸ் காவலில் அனுப்ப எதிர்ப்பு தெரிவித்தும் சவுக்கு சங்கரின் வக்கீல்கள் சில ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒருநாள் மட்டும் திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள கிளை சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கவும், நாளை (நேற்று) மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும், அப்போது சவுக்கு சங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லால்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று காலை அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்காக லால்குடி கிளை சிறையில் இருந்த சவுக்கு சங்கரை பெண் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அதைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், சவுக்கு சங்கரை போலீஸ் காவலுக்கு அனுப்பக்கூடாது. ஏற்கனவே அவருக்கு ஒரு கை ஒடிந்து உள்ளது. போலீஸ் காவலில் அனுப்பினால் இன்னொரு கையையும் உடைத்து விடுவார்கள். மேலும் என்கவுண்ட்டர் கூட செய்வார்கள் என்று வாதங்களை முன்வைத்தனர்.
அதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வக்கீல்கள், இது பெண் போலீசை பற்றி அவதூறாக பேசியதற்காக அல்ல. இவரது பேச்சால் ஒட்டுமொத்த பெண் சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளது. கை ஒடிந்ததை எல்லாம் காரணம் கூறமுடியாது. இவரை குறைந்தது 5 நாட்களாவது போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயப்பிரதா, மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தனது உத்தரவை தெரிவிப்பதாக கூறினார். பின்னர் 3.50 மணிக்கு மீண்டும் கோர்ட்டு தொடங்கியது. அப்போது, சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிப்பதாகவும், நாளை (இன்று) மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அவரை திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.