ஆடி அமாவாசையை முன்னிட்டுகடற்கரை, கோவில்களில்முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசையை முன்னிட்டு கடற்கரை, கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.
விளாத்திகுளம்:
ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று கடற்கரை, கோவில்களில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தினருடன் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ஆடி அமாவாசை
விளாத்திகுளம் அருகே 2-வது ராமேஸ்வரம் என்று அழைக்கப்படும் சிப்பிக்குளம் கடற்கரையில் நேற்று ஆடி அமாவாசைைய முன்னிட்டு விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்தினருடன் அதிகாலை 5 மணி முதல் திரண்டனர். கடலில் புனித நீராடி தங்களது குடும்பத்தினருடன் எள், பூ, தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்கள் மூலம் வழிபாடு நடத்தி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் பூஜையில் வைத்த பிண்டங்களை கடலில் கரைத்து வழிபட்டனர்.
கோவிலில் வழிபாடு
அங்கிருந்து புறப்பட்டு வைப்பார் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் இப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், கடலில் படகுகளில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் ரோந்து சுற்றிய வண்ணம் இருந்தனர்.
இதேபோல் எட்டயபுரம் பெரிய தெப்பக்குளம் அருகே கிருஷ்ணன் கோவில் வளாகத்தில் எட்டயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
கயத்தாறு
கயத்தாறு அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்டராமேஸ்வரர் கோவிலுக்கு நேற்று ஆடி அமாவாசை முன்னிட்டு சுற்றுவட்டாரத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் குடும்பத்தினருடன் வந்தனர். அங்குள்ள ராமர் தீர்த்தத்தில் புனித நீராடிய அவர்கள் எள், மற்றும் பிற பொருட்களை வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளம் அருகில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, பசு மற்றும் காகங்களுக்கு உணவு படைத்து வழிபட்டனர்.