நில அபகரிப்பு மனுக்கள் மீது தீர்வு காண ஒருங்கிணைப்பு குழு
தேனி மாவட்டத்தில், நில அபகரிப்பு தொடர்பான மனுக்கள் மீது தீர்வு காண மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழு அமைத்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
நிலம் அபகரிப்பு தடுப்பு பிரிவு
தமிழக போலீஸ் துறையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 203 மனுக்கள் பெறப்பட்டன. அதில், 4 ஆயிரத்து 528 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளில் 4 ஆயிரத்து 225 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த நில அபகரிப்பு தடுப்பு பிரிவுகளின் மூலம் ரூ.3,960 கோடி மதிப்பிலான 6 ஆயிரத்து 991 ஏக்கர் நிலம் மற்றும் சுமார் 101 ஏக்கர் பரப்பளவில் வீட்டுமனைகள் மீட்கப்பட்டு, 3 ஆயிரத்து 504 உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நில அபகரிப்பு குறித்த புகார்கள் கணிசமான அளவில் நிலுவையில் உள்ளன.
ஒருங்கிணைப்பு குழு
இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை, பதிவுத்துறை, நில அளவைத்துறை ஆகிய துறைகளின் ஆவணங்கள் தேவைப்படுகின்றன. போலீஸ் துறையில் அமைக்கப்பட்ட இந்த நில அபகரிப்பு தடுப்பு பிரிவானது பதிவுத்துறை, வருவாய்த்துறை, நில அளவைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் தனித்தனியே கலந்தாலோசித்து தேவையான ஆவணங்களை பெற்று மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதில் காலதாமதம் ஆகிறது.
இந்த காலதாமதத்தை தவிர்த்து, நிலம் அபகரிப்பு தொடர்பாக பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் ஒரு ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதற்காக கடந்த மார்ச் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்பேரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு வந்தது. அதன்படி, தேனி மாவட்டத்திலும் போலீஸ் துறை, பதிவுத்துறை, வருவாய்த்துறை மற்றும் நில அளவைத் துறைகளை சார்ந்த அலுவலர்களை கொண்ட மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.
வாரம் 20 மனுக்கள்
இந்த குழுவின் தலைவராக மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), உறுப்பினர் செயலராக நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் மாவட்ட பதிவுத்துறை தலைவர், ஆண்டிப்பட்டி வன நிலவரித்திட்ட தனி தாசில்தார், நில அளவைத்துறை கோட்ட பராமரிப்பு அலுவலர், நில அபகரிப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுவுக்கான பணிகள் வரையறுத்தும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இந்த குழுவின் கூட்டம் வாரம் ஒருமுறை நடத்தப்பட வேண்டும். அதில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் இனங்கள் குறித்து முன்கூட்டியே குழுவில் உள்ள துறை அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். விசாரணையின் போது வருவாய்துறை, பதிவுத்துறை, நில அளவைத்துறை அலுவலர்கள் தேவையான ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 20 மனுக்களாவது தீர்வு காண வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை பணிகள் குறித்து கலெக்டருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கலெக்டர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.